
காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு!
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்திற்காக சென்ற காங்கிரஸ் வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், இன்று தனது தொகுதிக்குட்பட்ட இருவப்பபுரம் பகுதியில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாகனப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அவரது வாகனத்தை மறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். “கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் தொகுதிக்கு நீங்கள் செய்த நன்மைகள் என்ன? வெற்றி பெற்ற பிறகு இப்போதுதான் உங்களை இந்தப் பகுதியில் பார்க்க முடிகிறது” என்று கூறி மக்கள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வேட்பாளரின் வாகனம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.