
நாமக்கல் அருகே தேர்தல் பணிக்கு சென்ற ஏட்டு விபத்தில் பலி
பரமத்தி வேலூரில் தேர்தல் பறக்கும் படை பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தலைமை காவலர் சாலையோர புளிய மரத்தில் மோதி பலி. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் பிரவீன்(35) ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் பிரவீன் தற்போது தேர்தல் பறக்கும் படையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று பகல் 2 மணிக்கு தேர்தல் பறக்கும் படை பணிக்கு (Duty மாற்றுவதற்காக) ஜேடர்பாளையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பரமத்தி காவல் நிலையத்திற்கு சுமார் 500 மீட்டர் முன்பாக வரும்போது எதிர்பாராத விதமாக அவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் தலைமை காவலர் பிரவீனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், அவரை மீட்டு பரமத்தி உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தலைமை காவலர் பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பரமத்திவேலூர் டிஎஸ்பி சங்கீதா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இச்சம்பவம் குறித்து
பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.