
நகராட்சி சின்டெக்ஸ் தொட்டி அருகே 90% எரிந்த நிலையில் பெண் பிணம்
தாராபுரம் 5 சாலை சந்திப்பில் பரபரப்பு – போலீசார் தீவிர விசாரணை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 5 சாலை சந்திப்பு பகுதியில் பழைய கோட்டைமேட்டு தெருவில், கிருஸ்துவர் கல்லறை அருகே உள்ள நகராட்சி சின்டெக்ஸ் டேங்க் தொட்டி அருகில், 90 சதவீதம் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் பிணம் ஒன்று கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உடல் முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் இடது காலில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், தலைமுடி சற்றே வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவரது வயது 65-க்கு மேல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த பெண் எதற்காக நகராட்சி தண்ணீர் தொட்டி அமைந்துள்ள அந்த இடத்திற்கு வந்தார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. அதே நேரத்தில், அப்பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த தீப்பரவலில் சிக்கி அவர் உயிரிழந்தாரா, அல்லது வேறு யாரேனும் தீ வைத்து விட்டு சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.