
திருப்பூர், ஆக. 10,,*செயற்கை பன்னீர் (அனலாக் பன்னீர்) விற்பனைக்கு தடை விதிக்க கோரிக்கை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு!**திருப்பூர் மாவட்டத்திலுள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில், உடலுக்கு கேடு விளைவிக்கும் செயற்கை பன்னீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து, அதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.*திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:செயற்கை தயாரிப்பு: பாரம்பரிய பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த ‘அனலாக் பன்னீர்’ என்பது பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய்கள், காய்கறி கொழுப்புகள் மற்றும் பால் பவுடர் சேர்த்து செயற்கையாக தயாரிக்கப்படும் ஒரு மாற்றுப் பொருளாகும்.ஆரோக்கிய கேடு: இது அண்மையில் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் புரதச்சத்து மிகக் குறைவு என்பதால் இது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.கண்காணிப்பு தேவை: உணவகங்கள் தங்கள் மெனு கார்டில் அனலாக் பன்னீர் பயன்படுத்துவதைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, திருப்பூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் உரிய கள ஆய்வு மேற்கொண்டு, இந்த செயற்கை பன்னீர் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.கண்டறியும் முறை:பன்னீர் துண்டை நீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து அதில் 2 அல்லது 3 துளிகள் அயோடின் கரைசல் சேர்க்கும் போது, அது நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறினால் அது செயற்கை பன்னீர் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.