
*தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி! – தவெக தலைவர் விஜய் அறிக்கை*தவெக தலைவர் விஜய் அறிக்கை: “தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று தி.மு.க.வின் பரம்பரைத் தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.”