



திருப்பூர் *கோயில்வழி பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக திறக்க வேண்டும் – பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்தல்* *திருப்பூர், ஜூலை 28:* திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு தாலுகா, கோயில்வழி பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகராட்சியால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக இரண்டு நவீன பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னரும் அவை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருகிலுள்ள தனியார் கட்டணக் கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிறுநீர் கழிப்பதற்கு ₹5 மற்றும் மலம் கழிப்பதற்கு ₹10 என கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள இலவச பொதுக் கழிப்பிடங்களை பூட்டி வைத்திருப்பது, அருகிலுள்ள கட்டண நவீன கழிப்பிடத்திற்கு வருவாய் ஈட்டுவதற்காகவே என்ற சந்தேகம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. எனவே, மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள இரண்டு பொதுக் கழிப்பிடங்களையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்துகிறது.மேலும், கோயில்வழி பேருந்து நிலைய வளாகத்தில் சில கடைகளின் முன்பாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் அமர்வதற்காக மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நாற்காலிகள் மற்றும் இருக்கைகள் சில கடைகளின் முன்பாக வைக்கப்பட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களே தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட அரசு சொத்துகள் தனிநபர்களின் வசம் இருக்க அனுமதிக்கக் கூடாது. அவற்றை மீட்டு, பொதுமக்கள் சுதந்திரமாக பயன்படுத்தும் வகையில் உரிய இடங்களில் மீண்டும் அமைக்க மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்து ரூபாய் இயக்கம் வலியுறுத்துகிறது.மண்டலம்–3 பகுதிக்குட்பட்ட கோயில்வழி பேருந்து நிலையத்தில் உள்ள இந்த பிரச்சினைகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் உடனடி ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது